தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

தேர்வுமுறை செயல்பாடுகள் : காவல் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்)

காவல் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பதவிக்கான தேர்வு

1.வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு.

பிரிவு உச்ச வயது வரம்பு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர். 32 வருடங்கள்
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் 35 வருடங்கள்
திருநங்கைகள் 35 வருடங்கள்
ஆதரவற்ற விதவைகள் 37 வருடங்கள்
முன்னாள் இராணுவத்தினர் (அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் மூன்றாண்டுகளுக்குள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்) மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் . 47 வருடங்கள்
20% காவல் துறை ஒதுக்கீட்டுத் தேர்வில் பங்கேற்கும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் 47 வருடங்கள்
2. கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி குழுமத்தால் வழங்கப்படும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு பட்டயச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டம் (B.E/B.Tech) பெற்றிருக்க வேண்டும்

3.வகுப்புவாரியாக இட ஒதுக்கீடு :

அ) ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் அரசு உத்தரவுகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவு 31%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.5%
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) 3.5%
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 20%
ஆதிதிராவிட வகுப்பினர் 15%
ஆதிதிராவிட (அருந்ததியர்) வகுப்பினர் 3%
பழங்குடியின வகுப்பினர் 1%

ஆ) தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழைப் பெற்றிருப்பவர்கள் மட்டும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

4. 20% காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு :

காவலர் முதல் தலைமை காவலர்கள் வரை, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் அவர்களுக்கு சமமான பதவியில் இருப்பவர்கள் 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் அவர்கள் 5 வருடங்கள் பணியாற்றி முடித்திருக்க வேண்டும். 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளவீட்டுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:5 விகிதத்திலும், நேர்முகத்தேர்விற்கு 1:3 விகிதத்திலும் அழைக்கப்படுவார்கள்.

5. சிறப்பு பிரிவினருக்கான சலுகைகள் :

அ. முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் :

i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 47 வருடங்கள்.

ii. முன்னாள் இராணுவத்தினர் ( இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் ) மற்றும் இத்தேர்விற்கு இணையவழி விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் மட்டும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

iii. தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

ஆ. ஆதரவற்ற விதவை :

i. வயது வரம்பு தளர்வு: அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 37 வருடங்கள்.

ii. ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை வருவாய் கோட்ட அலுவலர் (RDO) சார் ஆட்சியர் (Sub-Collector) - உதவி ஆட்சியர் (Assistant Collector) அவர்களிடமிருந்து பெற்று இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்விதம் இச்சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஆதரவற்ற விதவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படமாட்டாது.

6. திருநங்கைகள் :

i. அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் 1 ஆம் தேதியன்று அதிகபட்ச வயது வரம்பு 35 வருடங்கள்.

ii. திருநங்கைகள், ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம்பாலினம் என ஏதேனும் ஒன்றினை தனது பாலினமாக தேர்வு செய்துகொண்டு உடற்கூறு அளத்தல் தேர்வு, உடல்தகுதிக் தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பம் செய்தால் தங்களது விண்ணப்பத்துடன், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்திலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

iii. திருநங்கைகள், மூன்றாம் பாலினத்தவர் என விண்ணப்பித்தால் இவர்கள் பாலினத்தில் பெண் விண்ணப்பதாரர்களாகப் பாவிக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு 30% இடஒதுக்கீடு பொருந்தும்.

iv. திருநங்கைகள், தனது சாதிக்குரிய சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் பிற விண்ணப்பதாரர்களைப் போன்று அவரவர் சார்ந்திருக்கும் வகுப்பினைப் பொருத்து வகுப்புவாரி ஒதுக்கீடு பெறலாம்.

v. திருநங்கைகள், சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காவிடில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் (MBC) பாவிக்கப்படுவார்கள்.

7. தேர்வுக் கட்டணம் :

தேர்வுக் கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.

8. எழுத்துத் தேர்வு மற்றும் பகிர்தளிக்கப்படும் மதிப்பெண்கள் விவரம் :

தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு குழுமத்தால் கீழ்கண்டவாறு மதிப்பெண்கள் பகிர்தளிக்கப்படும்.

பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:

i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.

iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்கள் 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 100 நிமிடங்கள். (1 மணி 40 நிமிடங்கள்).

iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.

vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை மட்டும் எழுத வேண்டும்.

பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:

வ.எண் தேர்வுகள் மதிப்பெண்கள்
1 முதன்மை எழுத்துத் தேர்வு
(அ) பொது அறிவு
(ஆ) தொழில்நுட்ப பாடங்கள்
80 மதிப்பெண்கள்
30 மதிப்பெண்கள்
50 மதிப்பெண்கள்
2 கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் 5 மதிப்பெண்கள்
3 சிறப்பு மதிப்பெண்கள் 5 மதிப்பெண்கள் பொது விண்ணப்பதாரர்கள்
தேசிய மாணவர் படை - 2 மதிப்பெண்கள்,
நாட்டு நலப்பணித் திட்டம் -1 மதிப்பெண்,
விளையாட்டுகள் - 2 மதிப்பெண்கள்.
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்:
தேசிய காவல் பணி திறன் போட்டிகளில் கீழ்கண்ட பதக்கங்களுக்கு வழங்கப்படும்:
தங்கப்பதக்கம் – 5 மதிப்பெண்கள்
வெள்ளிப்பதக்கம் – 3 மதிப்பெண்கள்
வெண்கலப்பதக்கம் – 2 மதிப்பெண்கள்
4 நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்கள்
மொத்தம் 100 மதிப்பெண்கள்

i. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற 80 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ii. வினாத்தாளில் 160 கொள்குறி வகை வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண் வழங்கப்படும்.

9. உடற்கூறு அளத்தல் தேர்வு :

முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த கட்டத் தேர்விற்கு அதாவது உடற்கூறு அளத்தல் தேர்விற்கு 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவார்கள். உடற்கூறு அளத்தல் தேர்வில் ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பு அளவீடும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உயரம் மட்டுமே அளவீடு செய்யப்படும். குறைந்தபட்ச தகுதி பின்வருமாறு.

அ) ஆண்கள் :-

உயரம்
பொதுப் பிரிவினர் (OC),
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC),
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)],
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC)
குறைந்தபட்சம் 163 செ.மீ.

ஆதிதிராவிடர் (SC),

ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)],

பழங்குடியினர் (ST)

குறைந்தபட்சம் 160 செ.மீ.
மார்பளவு அளத்தல்
(i) சாதாரண நிலையில்
(ii) மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் விரிவாக்கம்
குறைந்தபட்சம் 80 செ.மீ.
குறைந்தபட்சம் 05 செ.மீ.
(80 செ.மீ.- 85 செ.மீ.)

ஆ). பெண்கள் மற்றும் திருநங்கைகள் :

உயரம்
பொதுப் பிரிவினர் (OC),

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC),

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)],

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்

(MBC/DNC)

குறைந்தபட்சம் 154 செ.மீ.
ஆதிதிராவிடர் (SC),

ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)],

பழங்குடியினர் (ST)

குறைந்தபட்சம் 152 செ.மீ.

குறிப்பு :-

i. 20% காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கு உடற்கூறு அளத்தல் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ii. உடற்கூறு அளத்தல் தேர்வில் தகுதி பெறும் பொது விண்ணப்பதாரர்கள் மட்டும் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்றே காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவார்கள்.

10. அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் :

i. உடற்கூறு அளத்தல் தேர்வில் தகுதி பெறும் பொது விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

ii. முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற்ற காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 1:5 விகிதத்தில் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

iii. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு வயது தளர்வு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான உரிமைகளை இழப்பார்கள். பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களைத் தவிர புதிய சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

11. நேர்முகத் தேர்வு :

i. முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் அளவீட்டுத் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் 1:3 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

ii. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுவாரிய தலைமையகத்தில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போதுஅனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

iii. காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களைத் தவிர, மாநில அரசில் அரசு ஊழியர்களாக பணிபுரியும் விண்ணப்பதாரர்கள், அவரவர்கள் பணிபுரியும் பிரிவுத் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

iv. தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்கள் அல்லது தேசிய காவல் பணித் திறன் போட்டிகளில் (காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்) பெறப்பட்ட பதக்கங்களை வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை ஒரு புகைப்பட நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

12. கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் :

கூடுதல் கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்டவாறு கூடுதல் மதிப்பெண்கள் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த கூடுதல் மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வின் போதுபின்வரும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

கல்வித்தகுதி மதிப்பெண்கள்
இளங்கலைப் பொறியியலில் பட்டம் (மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) - 4 வருடங்கள் B.E. (ECE) 2
கணினி பயன்பாட்டு கல்வியில் இளங்கலை பட்டம் / கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்ப இளங்கலை அறிவியலில் பட்டம் - 3 வருடங்கள் BCA/B.Sc(CS)/B.Sc(IT) 2
கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது கணினி அறிவியல் தொழில்நுட்ப பொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்ப பொறியியலில் இளங்கலை பட்டம் - 4 வருடங்கள் B.E(C.S) or B.Tech(C.S) or B.E (I.T) 3
கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டயப் படிப்பு - 1 வருடம் (PGDCA) 1
தகவல் தொடர்பு அமைப்பு பொறியியலில் முதுகலைப் பட்டம் அல்லது தகவல் தொடர்பு அமைப்பு தொழில்நுட்ப பொறியியலில் முதுகலைப்பட்டம் - 2 வருடங்கள் M.E (Communication System) or M.Tech (Communication System) 1
கணினி அறிவியல் பொறியியலில் முதுகலைப்பட்டம் அல்லது கணினி அறிவியல் தொழில்நுட்ப பொறியியலில் முதுகலைப் பட்டம் - 2 வருடங்கள் M.E (C.S) or M.Tech (C.S) 2
கணினி பயன்பாட்டு கல்வியில் முதுகலைப்பட்டம் - 3 வருடங்கள் MCA 2
13. சிறப்பு மதிப்பெண்கள் : நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டுகள் :

அதிகபட்சம் ஐந்து மதிப்பெண்களுக்கு உட்பட்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நேர்முகத் தேர்வின் போது விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

I. பொது ஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் :

அ. தேசிய மாணவர் படை (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :

ஒரு வருட உறுப்பினர் / A சான்றிதழ் ½ மதிப்பெண்
“B” சான்றிதழ் உடையவர்கள் 1 மதிப்பெண்
“C” சான்றிதழ் உடையவர்கள் / சார்பு அலுவலர் - அகில இந்திய அளவில் சிறந்த NCC மாணவர் 2 மதிப்பெண்கள்

ஆ. நாட்டு நலப்பணித் திட்டம் (அதிகபட்சம் 1 மதிப்பெண்) :

கீழ்க்காணும் மாநிலங்களுக்கிடையேயான தேசிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டமைக்கு – அ) குடியரசு தின அணி வகுப்பு - புதுடெல்லி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஊக்க முகாம், மாநில அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையினால் மாநிலங்களுக்கிடையே இளைஞர்களுக்கான பரிமாற்ற திட்டங்களில் பங்கு பெற்றவர்கள் ½ மதிப்பெண்
மாநில அளவில் அல்லது தேசிய அளவில் சிறந்த நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர் அல்லது புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் 1 மதிப்பெண்
அரசு ஆணை நிலை எண் 8, தேதி 21.01.2002-ல் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக பங்குபெற்றவர்கள் அல்லது மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்குகொண்டமைக்கான சான்றிதழ் பெற்றவர்கள் 1/2 மதிப்பெண்

இ. விளையாட்டுகள் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) :

அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் : - 1. கூடைப்பந்து 2. கால்பந்து 3. வளைகோல் பந்து (ஹாக்கி) 4. கையுந்துப்பந்து 5. கைப்பந்து 6. கபடி 7. மல்யுத்தம் 8. குத்துச் சண்டை 9. ஜிம்னாஸ்டிக்ஸ் 10. ஜூடோ 11. பளு தூக்குதல் 12. நீச்சல் போட்டி 13. தடகளப் போட்டிகள் 14. குதிரையேற்றம் 15. துப்பாக்கி சுடுதல் மற்றும் 16.சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.

i) விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் விளையாட்டில் பங்கேற்றிருக்க வேண்டும்

ii. விண்ணப்பதாரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்ற விளையாட்டுப் படிவம்- I அல்லது படிவம் - IIஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அல்லது தமிழ்நாடு ஒலிம்பிக் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் அல்லது இந்திய தேசிய ஒலிம்பிக் ஆணையம் மூலம் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்றிருத்தல் வேண்டும்.

iii. தமிழக பல்கலைக் கழகம் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு படிவம்-III பெற்றிருத்தல் வேண்டும்

பள்ளியின் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் ½ மதிப்பெண்
கல்லூரியின் சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் (Inter Collegiate) 1/2 மதிப்பெண்
பல்கலைக்கழகங்களின் சார்பாக பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் III (Inter University) 1 மதிப்பெண்
மாவட்டங்கள் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் 1 மதிப்பெண்
மாநிலத்தின் சார்பாக மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் II (Tamil Nadu) 1 1/2 மதிப்பெண்
தேசத்தின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக கலந்து கொண்டவர்கள் அதாவது படிவம் I (India) 2 மதிப்பெண்கள்

ஒவ்வொரு வகை சான்றிதழ்களிலும் உயரிய தகுதி கொண்ட ஒரு சான்றிதழுக்கு மட்டுமே உயர்அளவு மதிப்பெண் வழங்கப்படும். ஒரு விண்ணப்பதாரர் ஒரே மதிப்பெண்கள் பெற தகுதியுடைய இரண்டு சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் ஒரு சான்றிதழுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். மேலே சொல்லப்பட்ட மூன்று வகைச் சான்றிதழ்களுக்கும் சேர்த்து வழங்கப்படும் மொத்த சிறப்பு மதிப்பெண்கள் 5 மதிப்பெண்களுக்கு மிகாமல் இருக்கும்.

II. காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் :
தேசிய காவல் பணித் திறன் போட்டிகளில் பதக்கம் வென்றிருத்தல் (அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்)
தங்கப் பதக்கம் 5 மதிப்பெண்கள்
வெள்ளிப் பதக்கம் 3 மதிப்பெண்கள்
வெண்கலப் பதக்கம் 2 மதிப்பெண்கள்
காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டுகளுக்கான சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது
ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 5 சிறப்பு மதிப்பெண்கள் பெற தகுதியுடையவர் ஆவார்.
14. தற்காலிகத் தேர்வுப் பட்டியல் :

அ. முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் (கல்வித் தகுதி) ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்பவும் தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.

ஆ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது முன்னுரிமை வழங்கப்படும்.

இ. இறுதி தற்காலிகத் தேர்வின் போது சமமான தகுதி மதிப்பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் ஒரே பிறந்த தேதி, மாதம், ஆண்டினைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுள் எவரொருவர் சாரணர் இயக்கத்தில் பங்கு பெற்று மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் சான்றிதழைப் பெற்றுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஈ. பொது விண்ணப்பதாரர்களில் 1 ஆம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட முதல் பட்டயப்படிப்பு அல்லது முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், அனைத்து நிலைகளிலும் மற்றும் காலிப்பணியிடங்களில் 20% ஒதுக்கீடு செய்யப்படும்.

15. மருத்துவப் பரிசோதனை மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த விசாரணை :

தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கும் முந்தைய பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் குறித்த காவல் துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்